headlines

img

ரூபாய்... - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

காலையில் எப்பொழுதும் போல செலவுக்கு நூறு ரூபாய் கொடுத்த முருகேசனிடம், ‘‘இத வச்சுகிட்டு என்ன பண்றது” என வாய்வரை வந்த  வார்த்தைகளை சுமதி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். மாமியாருடன் சேர்த்து ஐந்து பேர் அடங்கிய குடும்பத்தை கொண்டு செலுத்துவதில் ஒவ்வொரு நாளும் சுமதி செத்துப்  பிழைத்தாள். பிள்ளைகள் மதிய நேரச் சாப்பாட்டை பள்ளியில் முடித்துக் கொண்ட போதும், மாலையில் வரும் பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் கொஞ்சம் காய்கறிகளோடு வயிறார சோறு போட வேண்டும். சுமதி, மஞ்சள் பையுடன் கடை வீதிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு வாசலில் பழைய அம்பாசடர் கார் கறுப்பு நிறத்தில் வந்து நின்றது.  பத்மாக்காவின் கணவர் பிரேதமாய் காரிலிருந்து இறக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாய் கணவருக்கு வந்த நோயுடன் இரவு பகலாய் மல்லுக்கட்டியதில் பத்மாக்கா பாதி ஆளாய் கரைந்து போயிருந்தாள். அரசு மருத்துவமனையிலிருந்து பிரேதத்தை எடுத்து வந்ததற்கு கார்க்காரன் வாடகை கேட்டான்.  நூறு ரூபாய் குறைவாய் இருப்பதை கறாராக கார்க்காரன் ஏற்க மறுத்துவிட்டான் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்ற பத்மாக்கா ஒரு நொடியில் பிச்சைக்காரியைப் போல தோற்றமளித்தாள்.

சுமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  கையிலிருந்த நூறு ரூபாயை, “இந்தாக்கா” என பத்மாவிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டாள்.  இதை பார்த்துக் கொண்டிருந்த மாமியார் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல்; சுமதிக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. அலமாரி, அஞ்சறைப் பெட்டி எல்லாவற்றிலும் தேடிப் பார்த்துவிட்டாள். ஒரு பைசா கூட தேறவில்லை. அப்படியே சமையலறைச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.  சுமதி படும் அவஸ்தையைப் பார்த்தவாறு இருந்த மாமியாரின் கண்களில் கரிசனம் தெரிந்தது. உரிக் கயிற்றில் சாமிக்கு முடிந்து வைத்திருந்த முடிச்சை அவிழ்த்துப் பார்க்கச் சொன்னாள். சுமதி அவசரமாக அவிழ்த்துப் பார்த்தாள். அதில் நூறு ரூபாய் ஒரு குழந்தையைப் போல சிரித்துக் கொண்டிருந்தது.

;